Thursday, May 17, 2018

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர்,போபால், சண்டிகர் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்வச் சர்வேக்‌ஷன் 2018 என்ற இந்த ஆய்வு 4,203 நகரங்களில் ஜனவரி 4 முதல் மார்ச் 10, 2018 வரை நடைபெற்றது. குடிமக்கள் கருத்து, நேரடியாக இடத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குடிமக்கள் கருத்திற்கு அதிகபட்சமாக 35% மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று (மே 16) வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் மாநில தலைநகரங்களின் பட்டியலில் பெருநகர மும்பை முதலிடம் பிடித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஜியாபாத், வேகமாக வளரும் பெரிய நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜார்க்கண்ட் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.