Friday, April 17, 2015

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றிஅக்னி 3 ஏவுகணை | கோப்புப் படம்

இந்திய ராணுவத்தில் அக்னி ரக ஏவுகணைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அணு ஆயுதங் களை ஏந்தி சென்று இலக்கை தாக்கும் அக்னி-3 ஏவுகணை நேற்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஒடிஸா மாநிலம் வீலர் தீவு கடற் கரை பகுதியில் இந்த சோதனை நடந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்லது.
மொபைல் லாஞ்சர் மூலம் காலை 9.55 மணிக்கு அக்னி-3 ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களிடம் சோதனை மைய இயக்குனர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்தார். இந்த அக்னி-3 ஏவுகணை 17 மீட்டர் நீளம் கொண்டது. 2 மீட்டர் சுற்றளவு உடைய இந்த ஏவுகணையின் எடை 50 டன்கள். மேலும் 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்று அவர் தெரிவித்தார். இந்த ஏவகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை இன்னும் மேம்படுத்தப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் நியமனம்நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ராஜ ராஜேஸ்வரி.அமெரிக்காவின் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி (43) நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த இவர், தனது 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். நியூயார்க் நகர நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன்பு ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தார். அவரை நியூயார்க் நகர் மேயர் பில் டி பால்சியோ, நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜராஜேஸ்வரி கூறியது: எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கனவு போன்று உணர்கிறேன். இது நான் கற்பனை செய்ததற்கும் மேலானது. எனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். எனக்கு இங்கு உயரிய பதவி கிடைத்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நீதித்துறையின் மேம்பாட்டுக்கு உதவுவேன் என்றார்..தெற்காசியா மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளை ராஜ ராஜேஸ்வரி திறமையாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தந்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி தனது குழுவினருடன் பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அவரது தாய் பத்மா ராமநாதனின் பெயரில் பத்மாலயா நாட்டிய அகாடமியை நடத்தி வருகிறார்.. இப்போது இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இரு ஆண்கள் அமெரிக்காவில் நீதிபதிகளாக உள்ளனர்.

இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தினால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் உல்லாசப் பயணிகளான இலங்கையர்கள், மின்னியல் பிரயாண அனுமதியின் ஊடாக இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருக்கின்றது.
இந்தப் பிரயாண நடைமுறையின் மூலம் பெங்களுர், சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொட்டா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் ஊடாக மாத்திரமே இந்தியாவுக்குச் செல்லக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் ஊடாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் புதிய நடைமுறை இலங்கைப் பயணிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்துள்ளது என்று, கொழும்பில் உள்ள கிளாச்சிக் ட்ரவல்ஸ் என்ற பிரயாண முகவர் நிலையத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ரிம்ஸான் மொகமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பொதுவாக, இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாகச் செல்பவர்கள், தமது நிதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக, வங்கிக் கணக்கின் விபரங்களுக்குரிய ஆவணம் உள்ளிட்ட சில ஆவணங்களைத் தமது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆனால் அந்த நடைமுறை இந்தப் புதிய ஏற்பாட்டில் இல்லையென்று தெரிவித்தார். எனினும், இது சிங்கப்பூரில் உள்ள நடைமுறையைப் போலல்லாமல், மின்னியல் பிரயாண அனுமதியைப் பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது என்றும், சாதாரண மக்கள், பிரயாண முகவர்களை நாட வேண்டிய தேவை உள்ளது என்றும் ரிம்ஸான் மொகமட்தெரிவித்தார்.

இந்தியாவிற்கு யுரேனியம் விற்க கனடா ஒப்புதல்

இந்தியாவிற்கு யுரேனியம் விற்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவுக்கு இந்தியப் பிரமதர் மோதி விஜயம் செய்திருக்கும் நிலையில், இதற்கான ஒப்பந்தம் ஒட்டாவா நகரில் கையெழுத்தானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கனடா 280 மில்லியன் டாலர் மதிப்புள்ள யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கும்.
இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை 1976ல் கனடா தடைசெய்தது. கனடா நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா அணுகுண்டு தயாரித்ததையடுத்து, கனடா இந்தத் தடையை விதித்தது.
இதற்கான யுரேனியம் கேமிகோவிலிருக்கும் வடக்கு சாஸ்கெட்சவான் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய யுரேனியச் சுரங்கம் இது.
"கனடா இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது, இந்தியா மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது" என பிரதமர் மோதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கனடாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
2012ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதன்படி, கனட நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய முடியும்.
ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என்பதை முடிவுசெய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது.
2032ஆம் ஆண்டுவாக்கில் 63,000 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் 22 அணு மின் நிலையங்கள் இருக்கின்றன. அடுத்த இருபதாண்டுகளில் மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.