Tuesday, April 1, 2014

நாசா நடத்திய போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு பரிசு

நாசா அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீ சாரதா வித்தியாலய மகளிர் பள்ளி மாணவிகள். |படம்: வந்தனா. அறிவியல் சார் கதையை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் இலக்கிய பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.

மதுரையை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் எஸ்.பி. விஷாகா நந்தினி, எம்.ஷெண்பகம், க.கமலி, பி.திவ்யப்ரியா மற்றும் எஸ்.கி. யோக லஷ்மி என்ற ஐந்து மாணவிகள் இணைந்து நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டிக்காக 'Cronus-The Utopia' என்ற கற்பனை கதை ஒன்றை இயக்கி உள்ளனர்.
இந்த அறிவியல் கற்பனை கதைக்கு நாசாவின் அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியில் மூன்றாவது பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெற்றி பெற்ற மாணவிகள் கூறுகையில், "கி.பி.,2250 ஆம் ஆண்டில் பூமியில் உள்ள இயற்கை வளங்களை மனித இனம் அழித்து, பின்னர் குரோனஸ் (cronus) என்ற பல வழிகளில் பூமியில் இருந்து மாறுபட்ட கற்பனை சனி கிரக சுற்றுப்பாதையில் மனிதர்கள் குடியேருகின்றனர்.
புதிதாக குடியேறிய கிரகத்தில் உள்ளவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாத்து வாழ தெரிகிறது. மேலும், அவர்களுக்கு ​​ஊழல் மற்றும் பூமியில் நிலவும் தீமைகள் என எதுவும் தெரியாது" என்று மாணவி நந்தினி விவரித்தார்.
"பூமிக்கு மாறாக அங்கு கழிவு மேலாண்மை, கழிவு மறுசுழற்சி, சூரிய மின்சக்தி, ரசாயன உரங்களை பயன்படுத்தாது இருத்தல் என பல்வேறு மேலாண்மை குறித்து இந்த கற்பனை கதையில் சித்தரித்திருந்தோம்" என்று மாணவி யோக லஷ்மி கூறினார்.
ஆசிரியை கனக லட்சுமி கூறும்போது, "1994 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியில் முதல் முறையாக கலந்துக் கொண்ட மாணவிகள் பரிசு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இலக்கிய பிரிவின் கீழ், முதல் பரிசை அரெசிபோ விண்வெளி அகாடமி, ப்யொர்டோ ரிகோ மற்றும் ரியென் சர்வதேச பள்ளியும், இரண்டாவது பரிசை ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மற்றும் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் அறிவியல் மற்றும் தொழில் நட்ப பள்ளி பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான பரிசுகள் வருகிற மே மாத லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்பட உள்ளன.