Thursday, March 13, 2014

பெண்களுக்கு சலுகை காட்டும் வங்கி

உஷா அனந்தசுப்ரமணியன்பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி (பி.எம்.பி.) 2013 நவம்பர் முதல் செயல்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள்தான் என்ன? அது வழங்கும் கடன்களுக்கு இதர அரசுத்துறை வங்கிகள் வசூலிக்கும் வட்டி வீதத்தைவிடக் குறைவு என்பதுதான் முக்கியமானது. கார் வாங்க, வீடு கட்ட, கல்லூரிகளில் உயர் கல்வி கற்க அது வழங்கும் கடன்கள் மீது குறைவான வட்டியே வசூலிக்கப் படுகிறது.

மகளிருக்கு முன்னுரிமை
# மகளிருக்காகவே தொடங்கப்பட்டது என்றாலும் ஆடவரும் இதில் கணக்கு களைத் தொடங்கலாம். இந்த வங்கியில் ஒரு சில ஆண் ஊழியர்களும் உண்டு. அதே வேளையில் கடன் மனுக்கள் மகளிரிடமிருந்து வரும்போது அவற் றுக்கு முன்னுரிமை தரப்படும்.
# சமையலறையை மாற்றியமைக்கவும் மாடுலர் கிச்சன் போன்ற நவீனத்து வத்துக்கும்தான் முதலில் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டது. அதற்கு வட்டியாக 12.25% வசூலிக்கப்பட்டது. இப்போது கார் வாங்க, வீடு கட்ட, உயர் கல்வி பயில கடன்கள் வழங்கப் படவுள்ளன.
# இப்போது கார் வாங்க 10.75% வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இனி கடன் வாங்குபவர் பெண்ணாக இருந்தாலும், இருவர் சேர்ந்து வாங்கும் கடனில் ஒருவர் பெண்ணாக இருந்தாலும் 10.50% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி பொதுவாக அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் கார் கடன் மீது வசூலிக்கும் வட்டி 10.95% ஆக இருக்கிறது.
# வீட்டுக் கடன்கள் வாங்கும்போதும் மகளிருக்குச் சலுகை தரப்படுகிறது. ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்கள் மீது 10% வட்டி வசூலிக்கப் படுகிறது. ரூ.75 லட்சம் வரையிலான கடன் என்றால் 10.25% வட்டி வசூலிக்கப்படும். ரூ.75 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனுக்கு 10.50% வட்டி வசூலிக்கப்படும். வீட்டுக் கடன் வாங்குவது பெண்ணாக இருந்தாலும், கூட்டாகச் சேர்ந்து வாங்கும்போது ஒரு பெண் அதில் உரிமையாளராக இருக்கும்பட்சத்திலும் வட்டியில் 0.25% குறைத்துக்கொள்ளப்படும்.
# ரூ.75 லட்சத்துக்கும் மேல் வீட்டுக்கடன் வாங்கினால் மகளிருக்கு பாரத ஸ்டேட் வங்கியிலும் பி.எம்.பி. வங்கி வசூலிக்கும் அளவே வட்டி வசூலிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 75 லட்சத்துக்கும் கீழே குறையும்போது வட்டி குறைவது பி.எம்.பி. வங்கியில் மட்டுமே.
# பாரதிய மகளிர் வங்கியில் அதிக மகளிர் கடன் வாங்க ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, மார்ச் மாத இறுதிவரை கார் வாங்கவோ, வீடு கட்டவோ கடன் வாங்கும் மகளிர் வாடிக்கையாளர் மனுக்களின் பரிசீலனைக்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
வட்டி குறைவான கடன்கள்
# தொழில்கல்வி பயிலும் இளம் மாணவிகளும் பி.எம்.பி.யில் கடன் பெறலாம். உள்நாட்டில் படிப்பதாக இருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதாக இருந்தாலும் கடன் வழங்கப்படும். சி.ஏ. என்றழைக்கப்படும் கணக்குத் தணிக்கையாளர் படிப்பு படிக்கும் மகளிருக்கு அவர்கள் வாங்கும் கடனுக்கான வட்டியில் 1% குறைத்துக்கொள்ளப்படும். அதே போல சி.ஏ. படித்து முடித்த பெண்கள் சுயமாக அலுவலகம் தொடங்கவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
# உள்நாட்டில் உயர் கல்வி பயில அதிகபட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்கப் படும். வெளிநாடுகளில் தங்கிப் பயில அதிகபட்சம் ரூ.20 லட்சம் கடன் தரப்படும்.
# மகளிர் ரூ.4 லட்சம் வரையில் வாங் கும் கடனுக்கு, யாரையும் அல்லது எதையும் பிணையாக வைக்க வேண் டிய அவசியமில்லை. ரூ. 4 லட்சம் வரையிலான கடன்களுக்கு 12.5% வட்டி வசூலிக்கப்படும்.
# தொழில்முனைவோராக உள்ள மகளிருக்கும் ஊக்குவிப்பு தரும் விதத்தில் இதன் கடன் கொள்கை இருக்கிறது. பெண்கள் கடன் வாங்கும் போது, வீடு அல்லது நிலம் போன்ற அசையாத சொத்துகளுக்கான பத்திரங்களைக் கொடுத்தால் அதன் உரிமை யாளராக தகப்பனார் அல்லது கணவர் அல்லது சகோதரர் பெயர்தான் பெரும்பாலும் இருக்கிறது. பெண்கள் தேவையில்லாமல் கடன் வாங்கி வம்பில் சிக்கமாட்டார்கள் என்பதால் இப்படி மற்றவர்களின் சொத்துகளைப் பிணையாகத் தர வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது. இப்படி பிணையில்லாத கடனாக ஒரு கோடி ரூபாய் வரையில் பெற முடியும்.
# சிறு, குறு தொழில் முனைவோர் களுக்காக உருவாக்கப்பட்ட கடன் உறுதி நிதி அறக்கட்டளையிலிருந்து இந்தக் கடன்கள் வழங்கப்படும்.
கவர்ச்சிகரமான வட்டி
# மகளிருக்குக் கடன் வழங்குவதுடன் மகளிர் முதலீடு செய்யும் பணத்துக்குக் கவர்ச்சிகரமான வட்டி வழங்கும் திட்டமும் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்கான நிரந்தர வைப்புகளுக்கு 3 மாதம் வரைக்கும் 7%, 3 முதல் 6 மாதங்கள் வரையிலான காலத்துக்கு 8%, அதற்குப் பிறகுள்ள காலத்துக்கு 9% என்று வட்டி வழங்கப்படும்.
# ஒராண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு 9.15% இப்போது வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகள் தரும் வட்டிவீதத்தைவிட இது சற்றே அதிகம். மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.5% வட்டி தரப்படுகிறது.
# மற்ற அரசுடைமை வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளுக்கு ஒரு லட்சம் வரையிலான தொகைக்கு ஓராண்டுக்கு 4% வட்டி கணக்கிடப்படுகிறது. பாரதிய மகளிர் வங்கியில் இது 4.5% ஆக இருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கு 5% வட்டி தரப்படும். ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை பி.எம்.பி.யில் இல்லை. கணக்கு தொடங்க குறைந்தபட்சம் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை என்கிறார் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் உஷா அனந்தசுப்ரமணியன்.