Monday, March 31, 2014

செரீனாவுக்கு 7-வது பட்டம்

மியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.

மியாமி மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸும், இரண்டாம் நிலை வீராங்கனையான லீ நாவும் மோதினர். இதில், செரீனா 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார்.
முதல் செட்டில் 2-4 என்ற கணக்கில் பின் தங்கிய செரீனா பின்னர் சுதாரித்து விளையாடி செட்டைக் கைப்பற்றினார். முதல் செட்டைக் கைப்பற்ற செரீனா கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இரண்டாவது செட்டில் செரீனா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். இப்போட்டி முழுவதிலும் 3 ஏஸ்களை மட்டுமே செரீனா விளாசினார்.
போட்டி தொடர்பாக லீ நா கூறுகையில், “நான் மோசமாக விளையாடியதாகக் கருதவில்லை. செரீனா 5-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்ததற்குப் பின் மிக நன்றாக விளையாடினார் என நினைக்கிறேன். இது மிக நல்ல போட்டி. வலையை நெருங்குவது, திரும்பிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இதில் நான் முயற்சி செய்தேன். இப்போட்டியில் என் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினேன்” என்றார்.
செரீனா வில்லியம்ஸ் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட 59 டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ளார். லீ நாவுடன் மோதிய கடைசி 12 போட்டிகளில் 11 போட்டிகளில் செரீனாவே வென்றுள்ளார். லீ நா செரீனாவை கடந்த 2008-ல் வீழ்த்தியிருந்தார்.