மருத்துவர்கள்கூடச் செய்யத் தயங்கும் சில விஷயங்களைச் செவிலியர்கள் அசாத்தியமாகச் செய்து முடிப்பார்கள். யாரென்றே தெரியாதர்வகளிடம்கூடக் குறையாத அன்பை நீட்டுவார்கள். அதில் ஒரு தாய்மை குணம் இருக்கும். அப்படிப்பட்ட செவிலியர்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைச் சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses ) இந்த தினத்தை அனுசரித்துவருகிறது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்தவச் சேவையின் வரலாற்று மைல்கல் என அழைக்கப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளைச் சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. |