ஆந்திர மாநிலப் பிரிவினையை எதிர்த்து மாநில முதல்வர் என்.கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததும், டெல்லியைத் தொடர்ந்து ஆந்திரம், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள 2-வது மாநிலமாகிவிடும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேநேரம், பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சீமாந்திரா பகுதிக்கு சில சலுகைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடப்பா, குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய 3 மாவட்டங்களில் தலா ரூ.15 கோடி செலவில் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
மேலும், ஹைதராபாதில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தை (என்ஐடி) சீமாந்திரா பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்று விஜயவாடாவில் அந்த
மையத்தை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீமாந்திரா தலைநகரை தேர்ந்தெடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கர்னூல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் ஒன்றை தலைநகராக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. எனினும், தெலங்கானா மசோதாவுக்கு குடியரசுத்
தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு இதுகுறித்து பரிசீலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்க வகை செய்யும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 20-ம்
தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 19-ம் தேதி ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் அவர் விலகினார்.
இதையடுத்து, மாநிலத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் வரும் ஜூன் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.