மழை மற்றும் பனிப்பொழிவை முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் செயற்கைக் கோளை ஜப்பான் ஏவியது. இச்செயற்கைக் கோள் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.
ஜப்பானின் தனேகஷிமா ஏவு தளத்திலிருந்து எச்-2ஏ ராக்கெட் மூலம் அது வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட 16-வது நிமிடத்தில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்தது. அதிலிருந்து 10-வது நிமிடத்தில் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நான்கு டன் எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உலகின் பருவ நிலையை முப்பரிமாண கோணத்தில் கண்காணிக்கும். இது தொடர்பாக நாடா நிர்வாக அதிகாரி சார்லஸ் கூறியதாவது: இந்த செயற்கைக்கோளை ஏவியதன் மூலம் நாம் அடுத்த நிலையை அடைந்திருக்கிறோம். தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரும் தாவல் இது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியில் பொழியும் மழை மற்றும் பனிப்பொழிவை முப்பரிமாண கோணத்தில் ஒளிப்படமாக பார்க்கப் போகிறோம்.
ஜிபிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் பருவநிலை மாறுபாட்டை அறிந்து கொள்ள உதவும். வெள்ளப்பெருக்கு போன்ற முன்னறிவிப்புகளை கூடுதல் துல்லியத்துடன் அறிவிக்க இயலும். நீராதாரங்களை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்றார்.