Showing posts with label tamil current affairs. Show all posts
Showing posts with label tamil current affairs. Show all posts

Monday, May 21, 2018

நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி அடிப்படையிலான தர நிர்ணயத் திட்டத்தை அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் 2018-19 நிதியாண்டில் அமல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தார். இதன்படி, வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இந்தியாவின் 101 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், வேளாண்மை, நீர்வளம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களின் தரவுகள் அரசு சார்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும், 101 மாவட்டங்களும் அவற்றின் மேம்பாட்டுப் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும். கேரளா மற்றும் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து இந்திய மாநிலங்களும் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. இம்மாநிலங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் இணைந்துவிடும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மாவட்டங்களுக்கான தரவரிசையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினம் 48.13 சதவிகிதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீவட் மாவட்டம் 26.02 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன. ராஜ்நந்த்கான், ஆஸ்மனாபாத், கடப்பா, ராமநாதபுரம், உத்தம்சிங் நகர், மகாசமந்த், கம்மம் உள்ளிட்ட மாவட்டங்களும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

Sunday, May 20, 2018

கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலில் கரீபிய கிரிக்கெட் மைதானங்கள் சேதமடைந்தன. இதைச் சீரமைக்க நிதி திரட்டும் பொருட்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் வேர்ல்டு லெவன் அணிகள் மோதும் ‘ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச்’ போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் மே 31ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான வேர்ல்டு லெவன் அணியில் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சந்தீப் லாமிச்சானே இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒரு சமூகத்தின் மரபுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துகளாகக் கருதப்படும் இந்த அருங்காட்சியகங்கள் தொல்லியல், இயற்கை வரலாறு, கடல்சார், கலை, வரலாறு, போர் எனப் பல வகைப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதியை உலக அருங்காட்சியக தினமாக சர்வதேச அருங்காட்சிய கவுன்சில் அறிவித்தது. 1977ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே 18ஆம் தேதியும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவுக்கு முன் கடைசியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்திய நாடு மலேசியா. அந்நாட்டில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி முறையை ரத்து செய்ய அந்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை சார்பாக ஆர்பிஎஃப் கவாத் மைதானத்தில் மே 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் ரயில்பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில் பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வைத்துள்ளன. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்று, இக்கண்காட்சியில் புதுமைப் படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருட்களை ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக நடைபெறும் ரயில்பெட்டி கண்காட்சியை நேற்று (மே 17) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
எபோலோ வைரஸ் நோய் மீண்டும் காங்கோவில் வேகமாகப் பரவிவருவதையடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. காங்கோவின் வட மேற்கு நகரான பண்டகாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் எபோலோ வைரஸ் நோய் இருப்பதை இந்த மாதத்தின் தொடக்கத்தில் காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலுங்கா கலேங்கா உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, எபோலா வைரஸ் அடுத்தடுத்து மக்களுக்கு வேகமாகப் பரவியது. சமீபத்தில் காங்கோவில் எபோலா நோயால் 42 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 23 பேர் உயிழந்துள்ளனர்.
பீகார் அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்யக் காய்கறி கூட்டுறவு மையங்களை அமைக்கவுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலையும் நுகர்வோருக்குச் சிறந்த காய்கறிகளும் கிடைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பு மாதிரியைப் பின்பற்றி செயல்படவுள்ளது. சுதா பிராண்ட் பாலைப் போலவே காய்கறிகளும் சேமிக்கப்பட்டு பதப்படுத்தி விநியோகிக்கப்படவுள்ளன.
பாட்னா, நாலந்தா, வைஷாலி, சமஸ்திபூர் மற்றும் பேகுசராய் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 97 தொகுதிகளில் இதுபோன்ற காய்கறி கூட்டுறவு மையங்களை அமைத்துள்ளதாகவும், அக்டோபர் முதல் சுதா பால் மையங்களில் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்றும் அம்மாநிலக் கூட்டுறவு அமைச்சர் ரானா ரந்திர் சிங் தெரிவித்துள்ளார்.
ரஸ்கின் பாண்ட்
இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்:

1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான்.

2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21.

3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார்.

4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார்.

5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.

6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales.

7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.

8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.
தமிழகத்தில் கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
71ஆவது கான் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த மே 8ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல உலக நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு திரைத் துறையில் சிறந்து பணியாற்றிய பெண் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது நடிகை ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்களை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்திய ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக ஈரான் உருவாகியுள்ளது.தற்போது ஈரானிடமிருந்து தனது இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈராக் மற்றும் சவுதி அரேபிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தை ஈரான் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் வெனிசுலாவும், ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. உலக எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஈரான் முக்கிய நாடாக விளங்குகிறது

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 ,574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்சசி பெற்று சாதனை படைத்தனர். இதற்கு மாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாசிநாயக்கனப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை.
வடகிழக்குப் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், இந்தியாவுடன் அப்பிராந்தியத்தின் தொடர்பினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பார்சல் சரக்கு விரைவு ரயில் (Parcel Cargo Express Train) என்ற சரக்கு ரயிலை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் தனது முதல் ஓட்டத்தை மே 17ஆம் தேதியன்று தொடங்கியது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மகாராஷ்டிர மாநிலத்தின் கல்யாண் நகரைச் சென்றடையும்.
85 கோடி இணையப் பயன்பாட்டாளர்களால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணைய வசதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமப்புறத்தில் இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
தனது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்பு பாலமாகச் செயல்பட்டதற்காக அமிதாப் பச்சனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவுக்கான இந்திய தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்தக் கௌரவ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியும் இந்திய கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே19 ) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 330 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் கிஷன் கங்கா மின்சார திட்டம் மற்றும் ஸ்ரீநகர் வட்டச் சாலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல்  நாட்டினார்.  இதனைத் தொடர்ந்து அனைத்து பருவ காலங்களிலும் ஸ்ரீநகர், கார்கில், லே பகுதிகளை இணைக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கி வைத்தார். ”ஜம்மு காஷ்மீர் ரூ.25000 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளால் வளர்ச்சி அடையப் போகிறது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். 14 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதை, நாட்டிலேயே மிகவும் நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும். மேலும் ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கப் பாதையாகவும் இது இருக்கும்” என்றார் மோடி.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கல்வி அலுவல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற புதிய படிப்பைத் தொடங்குவதற்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கல்வி அலுவல் குழுவில் தேசியப் பாதுகாப்பு ஆய்வு மையமும் இணைந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற புதிய பாடத்திட்டம் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெண்கள் நாளை திங்களன்று கோவா வந்தடையவுள்ளனர்.
இந்தியக் கடற்படையில் முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
உத்தரகாண்டைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி (28) தலைமையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரைச் சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனைச் சேர்ந்த பாயல் குப்தா ஆகியோர் நிக்கா சாகர் பரிக்கிராம என்ற திட்டத்தின் பெயரில் 26,100 நாட்டிக்கல் மைல், அதாவது 42,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த எட்டு மாத பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள், கேப் டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணிகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சாலைகளுக்குத் தரவரிசை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்குத் தரவரிசை வழங்குவதன் மூலம் போட்டித்தன்மை உருவாக்கி வாகன ஓட்டிகளுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.