புதிய தனியார் வங்கிகளுக்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் அளித்தது ஜலான் தலைமையிலான குழு. நான்கு மணிநேர சந்திப்புக்கு பிறகு தன்னுடைய பரிந்துரையை செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியிடம் ஜலான் அளித்தார்.
இந்த பரிந்துரையில் புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பெயர் இருக்கிறது. ஆனால் எந்தெந்த நிறுவனங்களின் பட்டியல் இருக்கிறது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
கடந்த வருடம் நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்த குழு விண்ணப்பித்த நிறுவனங்களை பரிசீலனை செய்தது. முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவில் செபியின் முன்னாள் தலைவர் சி.பி.பாவே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் உஷா தோரட், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் நசிகேத் மோர் உள்ளிட்ட நால்வர் இந்த விண்ணப்பங்களை பரீசிலனை செய்தனர்.
ஆரம்பத்தில் 27 விண்ணப்பங்கள் வந்தன. அதன்பிறகு டாடா குழுமம் மற்றும் வேல்யூ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கி விட்டன.
பஜாஜ் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், ரெலிகர், ராம் கேபிடல், ஆதித்ய பிர்லா குழுமம், ரிலையன்ஸ் கேபிடல், இந்திய தபால் துறை, ஐ.எஃப்.சி.ஐ. உள்ளிட்ட 25 நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
கடந்த 20 வருடங்களில் ரிசர்வ் வங்கி 12 தனியார் வங்கிகளுக்கு இரண்டு கட்டமாக அனுமதி கொடுத்திருக்கிறது. முதல் முறை 10 தனியார் வங்கிகளுக்கும், இரண்டாம் முறை கோட்டக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கி ஆகிய நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி கொடுத்தது ரிசர்வ் வங்கி.
2001-ம் ஆண்டு தனியார் வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிகளை வகுக்க முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சி..ஜி. சோமையா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ஐ.ஜி. படேல், எஸ்பிஐ முன்னாள் தலைவர் தீபங்கர் பாசு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
புதிய வழிகாட்டு நெறிகளின்படி விண்ணப்பித்த நிறுவனங்களில் தகுதி வாய்ந்த நிறுவனங்களை ஜலான் தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகளும்,22 தனியார் வங்கிகளும், 56 கிராம வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.