நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
சென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மக்களின் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் துறை புதிய உத்திகளைக் கையாண்டு உயர்ந்து வருகிறது.
இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
பத்து நாட்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அஞ்சல் துறையின் இது போன்ற சேவைகளுக்காக ரூ.4,909 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தேன்.
விரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதுபோன்ற வசதி மேலும் நான்கு மையங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆறு மாத காலத்திற்கு சோதனை முறையில் செயல்படுத்தப்படும். அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்றார் ப.சிதம்பரம்.
அஞ்சல் துறை ஏடிஎம் சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மையங்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.