எண்ணூர் துறைமுக நிறுவனத்துக்கு, காமராஜர் துறைமுக நிறுவனம் என பெயர் சூட்டப்பட்டது.
சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு, முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் பெயரை வைக்க, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
அதன்படி, சென்னையில் இன்று நடைபெற்ற பெயர் மாற்ற விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியது:
நாட்டில் உள்ள 12 துறைமுகங்களில் முதலாவது துறைமுகம் காமராஜர் துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் 40% வளர்ச்சி அடைந்து உள்ளது. மேலும், ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக முனையம் உருவாக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் தற்போது ஆறு சரக்கு கையாளும் தளங்கள் உள்ளன. அவற்றின் சரக்குகள் கையாளும் திறன் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் டன் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் 24 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது, 2012-13 நிதி ஆண்டின் 17.89 மில்லியன் டன்களைப் பார்க்கும்போது 34% வளர்ச்சி அடைந்துள்ளது.
12 ஆம் திட்ட காலத்தில் (2012-17) எண்ணூர் துறைமுகத்தில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் திறன் கொண்ட எரிவாயு முனையம், 16.8 மில்லியன் டன் கையாளும் சரக்குப் பெட்டக முனையம் ஆண்டுக்கு 2 மில்லியன் டன் திறன் கொண்ட பல்வகை இரண்டாவது சரக்கு முனையம் ஆகியவை செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு 9 மில்லியன் டன் கூடுதல் நிலக்கரி கையாளும் தளம் உருவாக்கப்படும். இதற்கான கட்டுமானப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த முனையங்கள் செயல்படுத்தப்படுவதினால் ஆண்டுக்கு 30 மில்லியன் டன் ஆக உள்ள எண்ணூர் துறைமுகத்தின் திறன், 12வது திட்டகால இறுதியில் ஆண்டுக்கு 67 மில்லியன் டன் ஆக அதிகரிக்கும்.
மேலும், ரூ.4,512 கோடி மதிப்பீட்டில் எரிவாயு முனையம் அமைத்திட இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அதே போல இந்தத் துறைமுகத்தில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் பல்வகை சரக்கு முனையம் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார் ஜி.கே.வாசன்.
இந்த நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தின் தலைவர் அதுல்ய மிஸ்ரா, வ.உ.சி. துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர், அனந்த சந்திர போஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.