இந்தியாவிற்கு யுரேனியம் விற்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது. கனடாவுக்கு இந்தியப் பிரமதர் மோதி விஜயம் செய்திருக்கும் நிலையில், இதற்கான ஒப்பந்தம் ஒட்டாவா நகரில் கையெழுத்தானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கனடா 280 மில்லியன் டாலர் மதிப்புள்ள யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கும்.
இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை 1976ல் கனடா தடைசெய்தது. கனடா நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா அணுகுண்டு தயாரித்ததையடுத்து, கனடா இந்தத் தடையை விதித்தது.
இதற்கான யுரேனியம் கேமிகோவிலிருக்கும் வடக்கு சாஸ்கெட்சவான் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய யுரேனியச் சுரங்கம் இது.
"கனடா இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது, இந்தியா மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது" என பிரதமர் மோதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கனடாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
2012ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதன்படி, கனட நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய முடியும்.
ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என்பதை முடிவுசெய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது.
2032ஆம் ஆண்டுவாக்கில் 63,000 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் 22 அணு மின் நிலையங்கள் இருக்கின்றன. அடுத்த இருபதாண்டுகளில் மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.